Wednesday, January 10, 2007

மதம் பிடிக்கவா மதங்கள் - 01

தோன்றி மறைந்த மதங்கள் உலகில் பல உண்டு. நின்று நிலைத்து வழி காட்டிக் கொண்டிருக்கும் மதங்கள் வெகு சிலவே இருந்து வருகிறது.

இந்தியாவை பொருத்தவரை இந்து கிருத்துவ மற்றும் இஸ்லாமிய என மும்மதங்களை சொல்லலாம்.

மதங்கள் தோன்றியது மனிதனுக்கு மதம் பிடிக்க வைக்கவா ?

இலை தழைகளை கட்டிக்கொண்டு காட்டு மிராண்டியாய் வாழ்ந்திருந்த மனிதனை ஒழுங்கு படுத்த வந்த மதங்களை இன்று மதம் பிடித்த மனிதர்கள் தாம் ஆட்டிப் படைக்கிறார்கள்.

அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் சொல்கிறார்

"மதம் என்று ஒன்று தோன்றிய காலத்தில் இந்தியாவில் இருக்கும் ஒரு மூலையில் இருந்த மனித கூட்டத்திற்கு எந்த மாதிரியான மத சிந்தனை ஏற்பட்டதோ .. அதே மாதிரியான சிந்தனை தான் அடுத்த கோடியில் இருந்த மனிதர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் "

என்கிறார்.

உண்மை தான். ஆனால் பின்னர் வந்த மக்கள் தங்களின் சுய சிந்தனைகளையும், மற்றவர்களை அடிமைப் படுத்தவும் தேவையான கருத்துகளை புகுத்தி வேறு வழியில் கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

உண்மையில் சேர்ந்து இருந்த கூட்டத்தை ஒழுங்கு படுத்த தேவையான விதிமுறைகளை சேர்த்து அதை மதம் என்றார்கள். மனிதன் தான் தலைவன் என்றால் மக்கள் அதை தொடர்ந்து கடைபிடிக்க மாட்டார்கள் என்று இறைவன் என்று ஒருவனை அடையாளம் காட்டினார்கள்.

அப்படி அடையாளம் காட்டியவனிடம் இறைவன் என்றால் என்ன என்றால், இயற்கையின் அதிசயங்கள் அனைத்தையும் காட்டி இவை தான் இறைவன் என்றான்.

நீர், நெருப்பு, ஆகாயம், மரம் என இயற்கை அனைத்தையுமே வணங்க ஆரம்பித்தான். மெல்ல மெல்ல இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை மனதில் வேறூன்ற தோன்றியது. அதற்கேற்றவாறே இயற்கையும் மாறி மாறி அதிசயங்களை காண்பிக்க ஆரம்பித்தது.


இறைவன் என்ற ஒருவன் இப்படியாய் உருவானான். மக்களின் மதிப்பையும் பெற்றான். இறைவனை அறிமுகப்படுத்தியவன் இறைவனின் தூதுவனாக கருதப்பட்டான். மத குரு என்று உருவானான். அவன் சொல்வது வேதவாக்காக மாறிப்போனது.

அந்த நேரத்திலும் இறைவன் இல்லை.. இதெல்லாம் பம்மாத்து வேலை என்று சொல்ல முயன்றவர்களை இயற்கையின் சீற்றங்களை காட்டி இது இறைவனின் சீற்றம், நீங்கள் நம்ப மறுப்பதால் வருகிறது என்று மதகுரு சொல்ல ஆரம்பித்தான். அதையும் சில மறுக்க முயலவே, சில அமானுஷ்யங்களை காட்டி இவை சாத்தான் இறைவனின் எதிரியால் அனுப்பப் படுவது. இறைவனுக்கு கட்டுப் படு இல்லை என்றால் சாத்தான் உன்னை முழுமையாக ஆக்கிரமிப்பான் என்று இறைவனின் தூதன் ஆரம்பிக்க...

சாத்தானும் உருவானான்..

( தொடரும் )